நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜராக, நீதிபதி பரத்குமார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
நீதிபதி விசாரணையின் போது, “விஜய் கலந்து கொண்டாலே அது மாநாடு போல இருக்கும். எந்த ஆவணங்களையும் நான் ஏற்க முடியாது. மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன்” என தெரிவித்தார்.
நிர்வாகிகள் மீது விசாரணை நடத்தியபோது, நீதிபதி, “உங்களை யாரும் அடித்தார்களா?” என கேள்வி எழுப்பினார். இருவரும் எந்தவிதப் புகாரும் இல்லை என்று தெரிவித்தனர். பின்னர் அரசு வழக்கறிஞர் தண்டபாணி, போலீசார் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியிருந்தாலும், தவெக நிர்வாகிகள் அதனை பின்பற்றவில்லை; சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்பதால், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளக்கினார்.
தவெக தரப்பின் வழக்கறிஞர், “தமிழக அரசு விசாரணை ஆணையத்தை நியமித்து விசாரணை நடத்த உள்ளது. அந்த முடிவுவரை யாரையும் கைது செய்யக் கூடாது” என்றார்.
தவெக பிரச்சார கூட்டத்திற்கு மக்கள் தன்னிச்சையாக வந்ததாகவும், போக்குவரத்து மற்றும் அனுமதி பிரச்சினைகள் காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நீதிபதி, கூட்டம் குறைந்த அளவில் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள், மேலும் பத்தாயிரம் பேர் வருவார்கள் என நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள் என கடுமையாக கேள்வி எழுப்பினார்.