தஞ்சாவூர்: திமுகவின் ஆட்சி முடிவுக்கு இன்னும் 140 நாட்கள்தான் உள்ளன என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு, பா.ஜ. சார்பில் நயினார் நாகேந்திரன் ராஜராஜசோழன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் திறமையாலும் ஆட்சிச் சிறப்பாலும் திகழ்ந்தவர் மாமன்னர் ராஜராஜசோழன். நமது பிரதமர் நரேந்திர மோடி, கங்கை கொண்டசோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திரசோழனின் 1000வது ஆண்டு விழாவில் பங்கேற்று, சோழரின் மகத்துவத்தை உலகெங்கும் பரப்பினார்,” என்றார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்குள் கொண்டு வருவது குறித்து பலரின் ஆலோசனைகளை பெற்று, மத்திய அரசுடன் விவாதிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் தொடர்பாக அவர் கூறியதாவது: “நெல் கொள்முதல் தாமதத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். பல லாரிகள் நிலையங்களில் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் தேங்கி முளைத்து வீணாகி வருகிறது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் சினிமா பார்ப்பதில் மூழ்கியுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு ஏமாற்றி விட்டது,” என்றார்.
மேலும், “தி.மு.க அரசு இதுவரை எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர்களின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள்தான் உள்ளன. கவுண்டவுன் ஆரம்பமாகிவிட்டது. வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,” என்று நயினார் நாகேந்திரன் உறுதியாக தெரிவித்தார்.
