பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல்நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், 12 மணிக்கு மீண்டும் அவை கூடியபோது, பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் சத்தமிட்டு அமளி செய்தபோதும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் கிடைத்தால், ஆன்லைன் பெட்டிங் சேவைகளை வழங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும். e-Sports போட்டிகளில், வெறும் பரிசு மற்றும் டிராபிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசோதா தாக்கல் செய்யும் போதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியதால் சபையில் பரபரப்பு நிலவியது. மசோதா குறித்து கருத்து தெரிவிக்குமாறு அஸ்வினி வைஷ்ணவ் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரியிடம் கேட்டபோதும், அவர் முதலில் பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம் பற்றியே விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, பார்லி விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சியினரை “பள்ளி மாணவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்” என்று கடுமையாக சாடினார். தொடர்ந்து அமளி நீடித்ததால், அவைக்கு தலைமை தாங்கிய பி.சி. மோகன், பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
இதேபோல், எதிர்க்கட்சிகள் சத்தம் காரணமாக ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், “30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யப்படும்” என்ற மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ததும், அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மசோதா நகல்களை கிழித்து எறிந்து, சபையில் கூச்சல் போட்டனர்.
















