காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பூதலூர், அரசலங்குடி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் எல்கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7ஆம்தேதி மாலை பள்ளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றபோது தரங்கம்பாடி அருகே அரசலங்குடி அருகே சாலை நடுவில் இருதரப்பினர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது வாகன ஓட்டுநர் வழிவிடக்கோரி ஹாரன் அடித்தபோது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் 3 பேர் பேருந்தை கல்லால் அடித்தும் கைகளால் கண்ணாடியை அடித்தும் பேருந்தின் முன்பக்க வைபரை உடைத்தனர். அதிர்ந்துபோன மாணவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளி வாகன ஓட்டுநர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் 3 தனிப்படைகள்’ அமைக்கப்பட்டது. விசாரணையில் பூதலூரை சேர்ந்த ஆகாஷ்(20), கபிலன்(20), பெருவேலி தாமரைச்செல்வன் ஆகிய 3 பேர் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மூவர் மீதும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாமரை செல்வன் மன்னிப்பு கேட்ட வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டனர். தலைமறைவாக இருந்த ஆகாஷ் பூதலூரில் பதுங்கியுள்ளதாக பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ஆகாஷ் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வலது கையில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டது. ஆகாஷ்சை பிடித்த போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்ததில் அங்கு வலது கையில் மாவுகட்டு போடப்பட்டது. மற்றோரு எதிரி கபிலனும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆகாஷ் கல்வீசி தாக்குதல் நடத்திய பேருந்தில் பயணித்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசிய வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஆகாஷ் கபிலன் ஆகிய இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும், மீறி ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
