திடீர் சந்திப்பு : நயினார் நாகேந்திரன் – சிவி சண்முகம் இடையே ஒரு மணி நேர ஆலோசனை !

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திண்டிவனத்தில் அதிமுக எம்.பி சிவி சண்முகத்தை திடீரென சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தே இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதைத்தொடர்ந்து பாஜக தலைமையுடன் நயினார் நாகேந்திரனும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன் வெளியிட்ட கருத்துக்கு, சிவி சண்முகம் கடுமையாக எதிர்வினை தெரிவித்திருந்தார். அதில், “கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை” என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் அவரை நேரடியாக நயினார் நாகேந்திரன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “சிவி சண்முகம் எனது தம்பி போன்றவர். நட்பின் அடிப்படையிலேயே சந்தித்தேன். எங்கள் உறவுக்கு அரசியல் தொடர்பில்லை” என்று விளக்கம் அளித்தார்.

எனினும், வடமாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சிவி சண்முகத்தின் ஆதரவு பாஜகவிற்கு பலனளிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும், விரைவில் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான அழைப்பை எடப்பாடி பழனிசாமியிடம் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் அந்நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார். இந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே சிவி சண்முகம் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Exit mobile version