மதுரை மண்ணில் புரட்சித் தலைவர் நினைவு தினம் திமுக அரசு மீது கடும் விமர்சனம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், தற்போதைய திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். “வரும் பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு 10,000 ரூபாய் கொடுத்தாலும் கூட, மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து திமுகவினர் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது வெறும் தேர்தல் நாடகம். மக்கள் நலனில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை,” என்று குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமையில், ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் நகர் செயலாளர் சரவணகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வெற்றிச்செழியன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதேபோல், சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலையிலும், வாடிப்பட்டியில் பேரூர் செயலாளர் அசோக்குமார் மற்றும் ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. பரவை மற்றும் நாகமலைப் புதுக்கோட்டை பகுதிகளிலும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று எம்.ஜி.ஆரின் மக்கள் நலத் திட்டங்களை நினைவு கூர்ந்தனர்.

உசிலம்பட்டியில் நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நகராட்சித் தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வுகளில், எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என நிர்வாகிகள் சூளுரைத்தனர். அன்னதான நிகழ்வுகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசியல் ரீதியாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட இந்த நினைவு தின நிகழ்வுகள், மதுரை மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Exit mobile version