எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம்  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்குக் கட்சியின் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ் மோகன் மற்றும் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் போது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்கப் பாடுபடுவோம் என்றும் தொண்டர்கள் உறுதி ஏற்றனர். இதில் பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜன், முரளி, சேசு, முகமது இக்பால் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

எரியோடு பகுதியில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பழனிச்சாமி மற்றும் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் அறிவாளி, அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் குணசேகரன் மற்றும் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், மலைப்பகுதியான கொடைக்கானலில் நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று எம்.ஜி.ஆரின் மக்கள் நலத் திட்டங்களை நினைவு கூர்ந்தனர். தொழில்நுட்பத் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

நிலக்கோட்டை பகுதியில் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற அஞ்சலி கூட்டங்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன் மற்றும் நல்லதம்பி தலைமை வகித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். நகர செயலாளர்கள் தண்டபாணி மற்றும் சேகர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version