கட்டபொம்மன் பிறந்தநாள் மதுரையில் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா அதிமுகவினர் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும் தியாகத்திற்கும் இலக்கணமாகத் திகழும் தியாகசீலர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று எழுச்சியூட்டும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த விழாவிற்கு மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் பங்கேற்று, கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள், “வரி கொடுக்க மறுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நடுங்கச் செய்த மாவீரன் கட்டபொம்மனின் வீரமும், தாய்நாட்டின் மீதான அவரது பற்றும் இன்றும் இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டனர். இந்த விழாவில் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், திரவியம், பேராசிரியர் உசிலை ஜெயபால், புறநகர் இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஜெயவேல், கருப்புசாமி, பரவை ராஜா, வி.பி.ஆர். செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் எனப் பெரும் பட்டாளமே அணிவகுத்து நின்றது. அதிமுக தொண்டர்கள் “வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் ஓங்குக” என எழுப்பிய முழக்கங்கள் அப்பகுதியையே அதிரச் செய்தன. மதுரை மாநகரின் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவினால் போக்குவரத்துச் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் ஆர்வத்துடன் நின்று வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலையை வணங்கிச் சென்றனர். தமிழகத்தின் வீர வரலாற்றைப் போற்றிப் பாதுகாப்பதில் அதிமுக எப்போதும் முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது.

Exit mobile version