ஒடிசா மாநிலத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்திருந்த கல்லூரி மாணவி ஒருவர், நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து தன்னையே தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்போது 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
பாலசோர் நகரைச் சேர்ந்த சம்பவப் பகுதியில், உள்ள அரசு கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், தன் தலைமைப் பேராசிரியரான சமீர் குமார் சாஹுவை பாலியல் தொல்லை புகார் குழுவிடம் கடந்த ஜூலை 1ஆம் தேதி புகார் அளித்திருந்தார். மாணவி, ஆசிரியர் தனது மீது பாலியல் ரீதியில் தவறான நடத்தை மேற்கொண்டதாகவும், மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மாணவியின் புகாரை அடுத்து, “ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தபோதிலும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, மாணவி தனது நண்பர்களுடன் கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தையடுத்து, மாணவி திடீரென புவனேஸ்வர் முதல்வர் அலுவலகம் அருகே பெட்ரோல் ஊற்றி தன்னையே தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றபோதும் தீ பரவியது. மாணவியுடன் இருந்த மற்றொரு மாணவரும் தீக்காயமடைந்துள்ளார்.
இருவரும் தற்போது புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவிக்கு 95% தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஒடிசா போலீசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தன்னிச்சையாக வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவியின் உயிர் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் பரவலான அதிர்ச்சி கிளம்பியுள்ளது.
குற்றச்சாட்டில் இருந்த ஆசிரியர் சமீர் சாஹு கைதுசெய்யப்பட்டு, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்துக்குப் பொறுப்பாக கருதப்பட்ட கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மாநில அரசிடம் விரிவான விளக்கம் கோரியுள்ளது.
















