தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ள உறவை முறித்துக்கொள்வதாகவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) தரப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்ததை அடுத்து, ஏற்கனவே அந்தக் கூட்டணியில் இருந்த ஓ.பி.எஸ்.-க்கு தேவையான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஓ.பி.எஸ். நேரம் கேட்டும், அனுமதி மறுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமலிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அவருடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடிப்பது தொடருமா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஓ.பி.எஸ்., அனைத்து சந்தேகங்களுக்கு இன்று பதில் வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்தவகையில், இன்று காலை 10 மணி அளவில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர், ஓ.பி.எஸ். தரப்பு செய்தியாளர்களை சந்தித்து, “தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ள உறவை முறித்துக்கொள்கிறோம்; பாஜகவுடன் உள்ள கூட்டணியிலிருந்தும் விலகுகிறோம்” எனத் தெரிவித்தனர்.