மதுரை : தமிழ்நாட்டின் தென்மாநிலப் பெருநகரமான மதுரையில், சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நாளை மறுநாள் (அக்டோபர் 9) திறந்து வைக்க உள்ளார்.
சென்னை, கோவை போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் தொழில், கல்வி, மற்றும் விளையாட்டு வசதிகளில் மதுரை வளர்ச்சி குறைந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக முக்கிய முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. டைடல் பார்க் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, மதுரையில் இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டில் தொடங்கிய ஸ்டேடியம் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சிந்தாமணி ரிங்ரோடு அருகே, வேலம்மாள் மருத்துவமனை வளாகத்துக்கு பக்கத்தில் அமைந்துள்ள இந்த புதிய கிரிக்கெட் மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஸ்டேடியம் எனப் பார்க்கப்படுகிறது.
ரூ.36 கோடி செலவில் சிறப்பான வசதிகள்
மொத்தம் ரூ.36 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம், 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி, வீரர்களுக்கான ஓய்வறை, ஜிம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள், பரந்த கார் பார்க்கிங் ஆகிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை நேரத்திலும் ஆட்டம் தடைப்படாமல் நடைபெறுவதற்காக, பெங்களூர் மைதானத்தைப் போன்று சிறப்பான வடிகால் அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றி ஐந்து அடி ஆழமுள்ள கால்வாய் அமைக்கப்பட்டு, மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஐபிஎல் வாய்ப்பு
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நிபுணர்களுடன் ஆலோசித்து மைதானத்தின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் டி.என்.பி.எல், ரஞ்சி டிராபி மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளும் மதுரையில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து தெரிவித்தபோது, “இது எங்களுக்குப் பெருமையாகும். திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் டிஎன்பிஎல் போட்டிகள் நடந்தாலும், இப்போது மதுரைக்கும் அதே வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இந்த ஸ்டேடியம் எதிர்கால வீரர்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும்,” என கூறினர்.
இதுவரை கிரிக்கெட் போட்டிகளை காண சென்னை அல்லது பெங்களூர் செல்ல வேண்டியிருந்த ரசிகர்கள், இனிமேல் மதுரையிலேயே போட்டிகளை காண முடியும் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.