இனிமேல் வேட்பாளர்கள் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. ஆன்லைன் முறையிலேயே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் மேளதாளம், ஊர்வலம் என மக்கள் மத்தியில் ஆடம்பரமாக மனு தாக்கல் செய்யும் கலாசாரம் இருந்தது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கூட்ட நெரிசல், அலங்கார நோக்கமுள்ள ‘கெட் அப்புகள்’ போன்ற அக்கப்போர்களுக்கு தேர்தல் ஆணையம் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்காக, தேர்தல் கமிஷன் ஏற்கனவே உருவாக்கியுள்ள ‘சுவிதா’ என்ற இணையதளம் மூலமாகவே வேட்பு மனுத் தாக்கல் செய்ய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்தளம் வழியாகவே வேட்பாளர்கள் தங்களது பெயர், கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, ஆன்லைன் வாயிலாக மனுத் தாக்கல் செய்யலாம்.
இந்த இணையதளத்தில் :
வேட்பாளர் போட்டியிட விரும்பும் தொகுதியை தேர்வு செய்யலாம்
சொத்துகள் மற்றும் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைக்கலாம்
தேர்தல் பிரசார அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட தகவல்களையும் சமர்ப்பிக்கலாம்
மத்திய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “வேட்பாளர்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, ஒட்டுமொத்த மனுத் தாக்கல் செயல்முறையையும் டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்த முறை முதலில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் பீஹார் தேர்தலில் அறிமுகப்படுத்தப்படும். அதன் வெற்றியை பொறுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்” என்றனர்.
இந்த டிஜிட்டல் முறை வேட்பாளர்களிடையே நேரத்தை மிச்சப்படுத்தும், சீர்மையான ஒரு முன்னேற்றமான முயற்சியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.