பாதையில்லை என்றால் ஓட்டும் இல்லை… வனத்துறை கெடுபிடியால் கொதிக்கும் கூடம் நகர் கிராமம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில், தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மலை உச்சியில் அமைந்துள்ள கூடம் நகர் கிராமம், இன்று அதிகாரவர்க்கத்தின் அலட்சியத்தால் தனித்து விடப்பட்ட தீவாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் விவசாயமே உயிர்நாடியாக உள்ளது. தாங்கள் விளைவிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் இந்த மக்கள் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைக்காடு கிராமத்திற்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தற்போது இந்தக் கிராமத்திற்குச் செல்லும் சாலை முற்றிலும் சிதலமடைந்து, கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அத்தியாவசியப் பொருட்களைத் தலைச் சுமையாகச் சுமந்தபடி மலைப் பாதையில் நடக்கும் அவலம் தொடர்கிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கோ அல்லது போக்குவரத்திற்கோ 4 சக்கர ஜீப் வாகனங்களை நாடினால், அவற்றிற்கு மிக அதிக வாடகை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முறையான சாலை வசதி இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பெண் கொடுக்கப் பலரும் தயங்குவதாகவும், இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையைப் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின. ஆனால், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்கு உட்பட்டது என்ற காரணத்தைக் கூறி, வனத்துறையினர் இந்தப் பணிகளை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் சம்பந்தப்பட்ட சாலையில் திடீரென சோதனைச் சாவடி அமைத்து, இரும்புத் தடுப்புகள் மூலம் கிராம மக்களின் நடமாட்டத்தைத் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று ரேஷன் பொருட்களைச் சுமந்து கொண்டு கிராமத்திற்குத் திரும்பிய மக்களை வனத்துறையினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்கள் கைகளில் இருந்த ரேஷன் பொருட்களைச் சாலையிலேயே வைத்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி வனப் பாதுகாவலரின் இத்தகைய நடவடிக்கைகள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக் குறியாக்குவதாகக் கூறி, கிராம மக்கள் வனத்துறைக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். வனத்துறையினரின் இந்தச் செயலைக் கண்டித்தும், அடிப்படை வசதியான சாலையை அமைக்கக் கோரியும், வரும் சட்டமன்றத் தேர்தலைத் தங்கள் கிராம மக்கள் அனைவரும் முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக ஒன்றுகூடி அதிரடித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முடங்கிக் கிடக்கும் சாலைப் பணிகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வனத்துறையால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version