தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கங்களை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தகுதி பெற்ற எந்த ஒரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து தவற விடப்படாது என உறுதியளித்தார்.
அவரின் தகவல்படி, அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரத்தில் தமிழகத்தில் மொத்தம் 6.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 96.22%, அதாவது 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட படிவங்களில் பாதியளவு ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வேலைகளில் மாநிலம் முழுவதும் 83,000 அரசு பணியாளர்களும், 33,000 தன்னார்வலர்களும், இந்திய அளவில் அதிகபட்சமாக 2.45 லட்சம் அரசியல் கட்சி பூத் லெவல் ஏஜென்ட்களும் ஈடுபட்டுள்ளனர். படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா பட்நாயக் மேலும் கூறியதாவது:
பட்டியலில் இருந்து நீக்கப்படுவது இறந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கணக்கெடுப்பு படிவம் தராதவர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவினர் மட்டுமே.
வாக்காளர்கள் வழங்கிய தகவல்கள் முதலில் ஆன்லைனில் பதிவாகும்; பின்னர் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவற்றை சரிபார்ப்பர்.
சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் ஆவணங்களை கோரி நோட்டீஸ் அனுப்புவர். இந்த செயல்முறை டிசம்பர் 8-க்குப் பிறகு தொடங்கும்.
சென்னை நகரின் நிலவரம் பற்றியும் அவர் கூறினார். 96.27% வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன; இதில் 50% திரும்பப் பெறப்பட்டு, 33.59% ஆன்லைனில் ஏற்றப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் படிவங்களும் இதே காலக்கட்டத்தில் பரிசீலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
படிவத்தை சரியாக நிரப்பி திருப்பி அளித்தவர்களின் பெயர்கள் கட்டாயம் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்றும், பெயர் இடம்பெறவில்லை என்றால் அதன் காரணம் வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
















