கோவை: “53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது. தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க கடிதம் கொடுத்துள்ளேன். அதில் முக்கியமான விஷயங்கள் உள்ளன, ஆனால் விதிமுறையின்படி அதை வெளியில் சொல்ல முடியாது,” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளேன். இதற்கான அடிப்படை பின்னர் உங்களுக்கு தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்திருந்து பாருங்கள்… நல்லதே நடக்கும்,” என்று தெரிவித்தார்.
“பாஜக என்னை இயக்க முடியாது”
பாஜக தங்களை இயக்குகிறதா என்ற கேள்விக்கு, “நான் 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை யாராலும் தனிப்பட்ட முறையில் இயக்க முடியாது,” என்று செங்கோட்டையன் உறுதியாக பதிலளித்தார்.
“அதிமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது”
அதிமுக குடும்ப ஆதிக்கம் குறித்து அவர் கூறியதாவது: “கட்சியில் மகன், மைத்துனன், மருமகன் என அனைவரும் தலையிடுகின்றனர். மாவட்டம், தொகுதி என எங்கும் அவர்கள் கையாளுகிறார்கள். இது மீடியாவுக்கே தெரிந்த விஷயம். இதனால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது,” என்றார்.
“பேச்சுவார்த்தை உறுதியாக நடக்கிறது”
அதிமுக தரப்பிலிருந்து தன்னுடன் யாராவது பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா என்ற கேள்விக்கு, “யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கும். ஆனால் பேச்சுவார்த்தை உறுதியாக நடந்து வருகிறது,” என உறுதி கூறினார்.
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து கேட்டபோது, “அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்,” எனச் சுருக்கமாக பதிலளித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சு அதிமுக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
