புதுச்சேரியில் மது குடிக்க பணம் இல்லாததால் கோவில் உண்டியலை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து உண்டியல் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி -வில்லியனுார் மெயின்ரோடு, அனந்தம்மாள் சத்திரம் பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் நிறைவடைந்து வழக்கம்போல் நடை சாத்தப்பட்டது. பின்பு நேற்று காலை கோவிலை திறந்தபோது உண்டியல் திருடப்பட்டு இருப்பதை கண்டு ஆலய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகானந்தன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர், அனந்தம்மாள் சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (23), என்பதும் மது அருந்துவதற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் கையில் பணம் இல்லாததால் கோயில் உண்டியலை திருடியது தெரிய வந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவில் உண்டியல் மற்றும் அதிலிருந்து பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.