அதிமுக கூட்டணியில் இணையப் போவதாக பேசப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக கூட்டங்களில் தவெக கொடியை எடுத்து செல்லவோ, அங்கு காட்டவோ கூடாது என நிர்வாகிகள் வழியாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் குமாரபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அப்போது சிலர் தவெக கொடியை உயர்த்தியதையும், அதனைத்தொடர்ந்து கூட்டணிக்கான அரசியல் பேச்சுகள் சூடுபிடித்ததையும் காணலாம்.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்த கூட்டணி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்திய விஜய், “நாம் தற்போது தனியாக அரசியல் செய்கிறோம். பிற கட்சிகளின் கூட்டங்களில் நமது கொடியை எடுத்து செல்ல வேண்டாம்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் தொலைபேசியில் அரைமணிநேரம் பேசிக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக கூட்டணி அமைக்கலாம் என எடப்பாடி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் இதற்கு “நான் மக்களை சந்திக்கப் போகிறேன்; பிரச்சாரம் தொடங்கப் போகிறேன். ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
அந்த உரையாடல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியான “கொடி ஏந்தல் தடை” உத்தரவு, தவெக–அதிமுக கூட்டணி வதந்திகளை தற்காலிகமாக மௌனப்படுத்தியுள்ளது.