மதுரை :
அதிமுகவிலிருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம் குறித்து நேற்று விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா அவர்களால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன்” என கூறியிருந்தார். இதற்கு எதிராக மதுரை சோழவந்தானில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி அவர் அழிவை அவரே தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது இருப்பது அதிமுக இல்லை ‘எடப்பாடி திமுக’. செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு அவருக்கு தகுதி இல்லை,” என்று தெரிவித்தார்.
“செங்கோட்டையன் அதிமுகவின் தீவிர தொண்டனும் திறமையான நிர்வாகியும் ஆவார். 2026 தேர்தலில் தோல்வியே எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும். நாளுக்கு நாள் அவரின் பதவி வெறி மற்றும் சுயநலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இல்லாமல் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர், 2024 மக்களவைத் தேர்தலில் ஏன் வெற்றி பெறவில்லை? அதிமுக தற்போது அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது,” என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே உறவு சரியில்லை என கூறப்படுகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்த செங்கோட்டையன், பின்னர் கட்சி தலைமை மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் சென்று பங்கேற்றதும், அதிமுக தலைமைக்கு எதிரான செயலாக கருதப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, செங்கோட்டையனின் அனைத்து பதவிகளும் பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் உள்கட்சி அதிருப்தி வெடித்துள்ளது.

















