ஸ்ரீஹரிக்கோட்டா : இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நிசார், இன்று (ஜூலை 30) மாலை 5:40 மணிக்கு, ஜிஎஸ்எல்வி-எப்16 ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
12,750 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து, பூமியின் கீழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முக்கிய நோக்கம்:
நிசார் செயற்கைக்கோளின் முக்கியக் குறிக்கோள், பூமியில் நடைபெறும் இயற்கை மாற்றங்களை தீவிரமாக கண்காணிப்பதாகும். குறிப்பாக:
பருவநிலை மாற்றம்
இயற்கை பேரிடர்கள் (பூகம்பம், சுனாமி, எரிமலை, நிலச்சரிவு, பனிப்பாறை உரிதல்)
சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை மிகத் துல்லியமாக பதிவு செய்யும்.
நிசாரின் சிறப்பம்சங்கள்:
மொத்த செலவு: ₹12,750 கோடி (அமெரிக்க மதிப்பில் 1.5 பில்லியன் டாலர்)
எடை : 2,392 கிலோ
படம் பிடிக்கும் திறன்: பூமியை அங்குலம் அங்குலமாக 3D முறையில் பதிவு செய்யும்
அதிரடியான தொழில்நுட்பங்கள்:
நாசா: எல்-பேண்ட் ரேடார், ஜி.பி.எஸ். ரிசீவர், விஞ்ஞான தகவல்களுக்கான இணைப்பு அமைப்புகள்
இஸ்ரோ: எஸ்-பேண்ட் ரேடார்
சிந்தெடிக் அப்ரேச்சர் ரேடார் (SAR) தொழில்நுட்பம் மூலம் தெளிவான தரவுகள்
உலகம் முழுவதும் பருவநிலை கண்காணிப்பு
இயற்கை பேரிடர் தரவுகளை இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பகிர்வு
திட்டத் தாமதம் :
தொடக்கத்தில் 2024-இல் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிசார், தொழில்நுட்ப தாமதம் காரணமாக இப்போது விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரு தலைசிறந்த விண்வெளி நிறுவனங்களின் கூட்டுச் செயல்பாடால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.