தமிழகத்துக்கு நடந்த துரோகம் : மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: “2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இபிஎஸ் மற்றும் அண்ணாமலை அருகருகே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

“எளிமை, நேர்மை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட தலைவர் மூப்பனார். நாடு முழுவதும் அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. பிரதமராக வேண்டிய நிலை ஏற்பட்டபோதும், சில சக்திகள் ஆதரவு தராமல் தடுத்தன. தமிழர் பிரதமராகும் வாய்ப்பை தடுப்பது, தமிழர்களுக்கு நேர்ந்த மிகப்பெரிய துரோகம். இதை நாம் மறக்கக் கூடாது.

இங்கே அரசியல் பேச விரும்பவில்லை. எனினும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – மூப்பனார் பேணிய கொள்கைபோல் நல்லாட்சி தமிழகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை நாமே கொண்டு வர வேண்டும்.”

மேலும் அவர் தொடர்ந்து, “போதைப்பொருள், சாராயம் போன்றவை சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கு தொண்டு செய்வது நமது கடமை. கூட்டணியில் முதிர்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும். அதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு உண்மையான அஞ்சலி” எனத் தெரிவித்தார்.

Exit mobile version