சினிமா உலகில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால், தன்னைச் சுற்றிய பரபரப்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த காஜல், 2020-ல் தொழிலதிபர் கௌதமுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில், காஜல் அகர்வால் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக சில சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அதற்கு பதிலளித்த காஜல், தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டார்.
அதில், “நான் விபத்தில் சிக்கியதாகவும், இறந்துவிட்டதாகவும் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. உண்மையாகச் சொன்னால் மிகவும் வேடிக்கையாகவே உள்ளது. கடவுளின் அருளால் நான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். தவறான செய்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம். அதற்கு பதிலாக உண்மைக்கும், நேர்மறை எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.
காஜலின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சினிமா பொறுத்தவரை, சமீபத்தில் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியாகிய கண்ணப்பா படத்தில் பார்வதி வேடத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தில் மண்டோதரி வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
