திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நூற்றாண்டு விழா இன்று மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்வில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்கள் முன்னிலை வகித்தார்.
விழாவின் தொடக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வழங்கிய வாழ்த்து செய்தியுடன் கூடிய குறும்படம் மாணவர்களுக்காக திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட ஐய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு, புதிய நுழைவு வாயில் திறப்பு, மற்றும் நூற்றாண்டு மலர் புத்தகம் வெளியீடு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளும் அமைச்சர்கள் பெருமக்களால் தொடங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பேசிய அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற உன்னத நோக்கில் தமிழ்நாடு அரசு இயங்குகிறது,” என்று கூறினார். அவர் மேலும், “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவானது போல, இன்று முதலமைச்சர் அவர்கள் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
அதேபோல் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு மைதான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்தார். “மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, பழனி அருகே காளாஞ்சிப்பட்டியில் கோடி ரூபாய் மதிப்பில் ‘கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம்’ குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் சொல்லிய வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவது இம்மாநில அரசின் பெருமை,” என்றும் கூறினார்.
விழாவில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று நூறு ஆண்டுகளை எட்டியுள்ளது. இன்றைய விழா நூற்றாண்டு விழாவை விடவும், முப்பெரும் விழாவாக திகழ்கிறது ஏனெனில் திருவள்ளுவர் சிலை திறப்பு, நுழைவு வாயில் திறப்பு, நூற்றாண்டு மலர் வெளியீடு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நடைபெறுகின்றன,” என்று தெரிவித்தார்.
அமைச்சர் மேலும், “இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் தலைசிறந்த நிலையை அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்களது இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்,” என்று கூறினார். அவர் மேலும், “முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,867 கோடி நிதியொதுக்கீடு செய்து வருகிறார். அதில் ஒரு முக்கியமான முயற்சியாக 22,931 தொடக்கப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போர்டு’ வகுப்பறை கற்றல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய முயற்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்கள் உரையாற்றும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில், துணை முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்கள் — ‘நான் முதல்வன்’, ‘கல்லூரி கனவு’ போன்றவை — மாணவர்களை கல்வியில் புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களின் சதவீதம் 99.28% என்ற சாதனையை எட்டியுள்ளது,” என்று தெரிவித்தார். இந்த விழாவில் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப. உஷா, பழனி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி மா. பரிமளா, பழனி நகராட்சி ஆணையர் திரு. ஆர். டிட்டோ, தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் திரு. வி. ராமராஜ், முன்னாள் தலைமையாசிரியர் திரு. மனோகரன்,
தற்போதைய தலைமையாசிரியர் திருமதி ம. சுதா, மற்றும் முன்னாள் மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
