அரையாண்டு விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகளுக்குப் புத்தாண்டு இனிப்புகளை வழங்கி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள பழமையான ஆர்.சி. தொடக்கப் பள்ளியில், 2026-ம் ஆண்டு பிறப்பு மற்றும் பள்ளி மறுதொடக்கத்தை முன்னிட்டுச் சிறப்பு வரவேற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறியதுடன், கல்வியின் அவசியத்தையும், சுகாதாரமான பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்குமாறு அன்போடு அறிவுறுத்தினார்.
தனது சொந்தத் தொகுதியான விராலிமலைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்விப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் அவர், இப்பள்ளி மாணவர்களின் கற்றல் சூழல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக, பள்ளிக்கு வருகை தந்த அவருக்குப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களின் மழலை மொழியில் புத்தாண்டு வாழ்த்துகளைக் கேட்டறிந்த அவர், குழந்தைகளுடன் அமர்ந்து எளிமையாக உரையாடியது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.
நிகழ்வின் நிறைவாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். மக்கள் பிரதிநிதியின் இந்த நேரடி வருகை, பள்ளிச் சிறுவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

















