வாஷிங்டன்: அமெரிக்கா, வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் வேலை அனுமதி ஆவணங்களை தானாக நீட்டிக்கும் நடைமுறையை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அந்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகளை அமெரிக்க குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார். அதின் தொடர்ச்சியாகவே, இப்புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர் 30 மற்றும் அதற்குப் பிறகு வேலை அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இனி தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படாது. தேசிய பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தணிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பைடன் நிர்வாகத்தின் போது, வேலை அனுமதி ஆவணங்கள் காலாவதியானவர்களுக்கு கூடுதல் 540 நாட்கள் வரை பணியாற்ற அனுமதி வழங்கும் தற்காலிக நடைமுறை அமலில் இருந்தது. ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம் அந்த நடைமுறையை ரத்து செய்து, புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்த முடிவால், அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
