27 வயதான திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா சம்பவம் நீதிமன்றத்திலும் சமூகத்திலும் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
ரிதன்யாவின் மரணத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, கவின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து, “ரிதன்யாவின் இரண்டு செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்யவில்லை. அவற்றில் முக்கியமான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கவின்குமார் தரப்பில், “திருமணத்திற்கு முன் ரிதன்யா தனது தோழிகளிடம் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறிய ஆடியோ பதிவுகள் அந்த போன்களில் உள்ளன” என வாதிக்கப்பட்டது.
இதற்கு போலீஸ் தரப்பில், “செல்போன்கள் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டால் தடயவியல் ஆய்வு நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, ரிதன்யாவின் இரு செல்போன்களையும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதே நேரத்தில், ரிதன்யா மூன்று சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், இரண்டாவது சிம் அவரது கணவருடன் பேசுவதற்காகவும், மூன்றாவது சிம் அவரது ஃபேஷன் டிசைனிங் ஆன்லைன் பிசினஸ்ஸுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்ப ஆதாரங்கள் வழக்கின் திசையை மாற்றக்கூடும் என்பதால், திருப்பூர் ரிதன்யா மரண வழக்கு மீண்டும் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.