பவுன்சர் விவகாரத்தில் புதிய திருப்பம் – “பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என விளக்கம்

மதுரை :
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஜயை பார்க்க மேடையருகே சென்ற இளைஞர் ஒருவரை பவுன்சர் தூக்கி வீசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் மற்றும் அவரது தாய், “என் மகனை பவுன்சர் தூக்கி வீசியதால் காயம் ஏற்பட்டுள்ளது” என புகார் அளித்தனர். அந்த புகார் மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதும் விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்ற இளைஞர், “உண்மையில் தூக்கி வீசப்பட்டது நான்தான். பெரம்பலூரில் பணம் பெற்று பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. எந்த அடியும் எனக்கு படவில்லை, நான் நலமாக உள்ளேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

அஜய் மேலும், “நான் ரேம்ப்வாக்கில் ஓடி விஜயை சந்திக்க முயன்றபோது பவுன்சர் தள்ளினார். அப்போது நான் கம்பியை பிடித்ததால் எதுவும் ஆகவில்லை. பின்னர் பவுன்சர் என்கிட்ட ‘சாரி’ கேட்டார். விஜய் அண்ணாவும் அதை கண்டு அதிர்ச்சி அடைந்து பவுன்சரிடம் எச்சரிக்கை கூறினார்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், “என்னிடம் மாநாட்டில் பங்கேற்ற ஆதாரங்களும் வீடியோ காட்சிகளும் உள்ளன. ஆனால் பொய் புகார் அளித்தவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. விஜயின் பெயருக்கு களங்கம் விளைவிக்க இப்படிப்பட்ட புகார்கள் கொடுக்கப்படுவது தவறு. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விளக்கத்தால், தவெக மாநாட்டில் பவுன்சர் சம்பவம் தொடர்பான சர்ச்சை புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.

Exit mobile version