தொழில்நுட்ப வளர்ச்சி தினந்தோறும் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மனிதர்களுக்கு பதிலாக ரோபோட் மூலமாக குழந்தையை பெற்றெடுக்கச் செய்யும் தொழில்நுட்பம் இதன் மூலம் சாத்தியமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ரோபோட்டின் உட்பகுதியில், கர்ப்பப்பையைப் போன்ற செயற்கை பைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் செயற்கை அம்னியாடிக் திரவம் நிரப்பப்பட்டு, அதனுள் விந்தணுவும் கருமுட்டையும் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் கரு உருவாகி, இயல்பான கர்ப்பகாலத்தைப் போலவே சுமார் 9 மாதங்கள் வரை குழந்தை வளர்க்கப்படும்.
குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் ஒரு சிறப்பு குழாய் மூலம் வழங்கப்படும். கரு உருவான தருணத்திலிருந்து பிரசவிக்கும் தருணம் வரை ரோபோட் அனைத்தையும் தானாகக் கட்டுப்படுத்தி செயல்படும் என கூறப்படுகிறது.
ஆனால், கரு எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதை செயற்கை கர்ப்பப்பையில் எவ்வாறு நிறுவுகின்றனர் என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த ரோபோட், அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் விலை சுமார் 12 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நவீன தொழில்நுட்பம் குறித்து சமூகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. குழந்தையின்மை காரணமாக தவிக்கும் தம்பதிகளுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என சிலர் பாராட்டுகின்றனர். அதே சமயம், குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது ஒரு தனித்துவமான உணர்ச்சி என்பதால், அதை எந்த தொழில்நுட்பமும் மாற்ற முடியாது என சிலர் விமர்சிக்கின்றனர்.
இதனால், “அம்மாவின் அன்புக்கு ஈடான தொழில்நுட்பம் எப்போதாவது சாத்தியமா ?” என்ற கேள்வியே தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.