அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்கள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் இன்று சென்னைச் சீர்முகத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களின் படி, இனிமேல் அரசியல் கட்சிகள் கூட்டம், பேரணி, ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான அதிகபட்ச நேரம் 3 மணி எனவும், அதில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் 2 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வைப்புத் தொகை (Deposit) வசூலிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி:

5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்கிற கூட்டத்திற்கு ரூ.1 லட்சம்,

10,000 முதல் 20,000 பேர் வரை இருந்தால் ரூ.3 லட்சம்,

20,000 முதல் 50,000 பேர் வரை இருந்தால் ரூ.8 லட்சம்,

50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பெரிய கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை வசூலிக்கப்படும்.

ரோடு ஷோவுக்கான நெறிமுறைகள் :
ரோடு ஷோக்களில் பேச்சாளர் இருக்கும் வாகனத்திலிருந்து 500 அடி தூரத்துக்குள் தடுப்பு அமைக்கப்பட வேண்டும். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பாக அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

பேச்சாளரை மக்கள் பின்தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடத்திலேயே உரை நிகழ்த்த வேண்டும்;

ரோடு ஷோ செல்லும் வழியில் வேறு இடங்களில் உரை நிகழ்த்தக் கூடாது எனவும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version