சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக மேம்படுத்தப்பட்ட நவீன பேருந்து நிலையம் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் ரூ.11.81 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நிலையம், பயணிகளுக்கும் பேருந்து பணியாளர்களுக்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
1.63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கான உணவகங்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனியறைகள், ஏடிஎம் மையங்கள், மின்தூக்கி வசதி, நவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்தும் தனித்துவமான ஓய்வு அறைகளும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. 20 பேருந்துகள் நிறுத்தக்கூடிய மூன்று தளவாடங்கள், புதிய வழித்தடப் பதாகைகள், பயணிகள் உட்காரும் வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் இயக்கமும் பயணிகளின் போக்குவரத்தும் அதிக வசதியாகியுள்ளது.
1967 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம், 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக முழுமையான புதுப்பித்தலுடன் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ள பகுதியில் அமைந்துள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்படுத்தும் இந்த நிலையம், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், தாம்பரம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் முக்கிய மையமாக செயல்படுகிறது. மேலும், விரைவு பேருந்துகளும் இங்கு வழியாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தினசரி சுமார் 140 பேருந்துகள், 1400 முறைகள் இந்த நிலையம் வழியாக வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ மேற்கொண்ட இந்த மேம்படுத்தும் பணிகள், வடசென்னையின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனுடன், ஆவடியில் ரூ.32 கோடி மதிப்பில் மேலும் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் மட்டும் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் 11 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
