மும்பை : ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த புதிய விமான நிலையம், நாட்டின் விமான போக்குவரத்து திறனை மேலும் உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தகுந்த அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புதிய முனையங்கள் மற்றும் வசதிகளை நேரில் பார்வையிட்டார். தொடக்க கட்டமாக உள்நாட்டு விமான சேவைகள் விரைவில் தொடங்கவுள்ளன. சர்வதேச சேவைகள் டிசம்பர் மாதத்திற்குள் துவங்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையத்தில் நான்கு முனையங்களும், இரண்டு ஓடுபாதைகளும் உள்ளன. மேலும், பிரத்யேக விவிஐபி முனையம் ஒன்றும் கட்டமைக்கப்பட உள்ளது. 2026 முதல் 2030 வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து கட்டுமான பணிகளும் முழுமையாக நிறைவடையும்.
லண்டனில் தலைமையகமுடைய ஜஹா ஹதீத் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனம் இந்த விமான நிலைய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. 47 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும் திறனுடன் இது இயங்கும்; மின்சார பஸ் சேவை மற்றும் வாட்டர் டாக்ஸி இணைப்புகள் கொண்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாகும்.
திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “நவி மும்பை விமான நிலையம் ஆசியாவின் முக்கிய இணைப்பு மையமாக உருவாகும். மும்பை நகரில் நிலத்தடி மெட்ரோவுடன் இணைந்து இது போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். மும்பை போன்ற நகரில் இத்தகைய பெரிய அளவிலான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முக்கிய சாதனை,” என கூறினார்.