இந்தியாவில் புதிய வகை காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, மும்பை, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் H3N2 எனப்படும் இவ்வகை காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் 11 ஆயிரம் வீடுகளை ஆய்வு செய்ததில், 69 சதவீத வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு இந்த காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது : “இந்த வைரஸ் கொரோனாவைப் போல அதிக தீவிரமல்ல. ஆனால் குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். H3N2 என்பது சுவாசத் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ். பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தால் சுவாசத் துளிகள் மூலம் எளிதில் பரவக்கூடும். இந்த வைரஸ் முற்றிலும் புதியதல்ல, வானிலை மாறும் காலங்களில் அடிக்கடி பரவும் ஒரு வகைதான்” என தெரிவித்தனர்.
இந்த காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்:
அதிக காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி, தலைவலி, தசை மற்றும் உடல் வலி, சோர்வு, வயிற்று வலி, சில நேரங்களில் குமட்டல், வயிற்றுப்போக்கு, சிலருக்கு சுவாசத்தில் சிரமம்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய் தானாகவே 3 முதல் 5 நாட்களில் குணமடைகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அதிக காய்ச்சல் அல்லது சுவாச சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.