கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வினைப் போற்றும் வகையிலான முப்பெரும் விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் இப்பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வழங்கிய அனன்யா குழுமத்திற்கான பாராட்டு விழா என மூன்று நிகழ்வுகளும் இணைந்து கோலாகலமாக அரங்கேறின. 100 ஆண்டுகாலக் கல்விப் பாரம்பரியம் கொண்ட இந்தப் பள்ளி, தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன வசதிகளைப் பெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிறப்பு வாய்ந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கி, அனன்யா குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் (CSR) கீழ் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மற்றும் நவீன உணவுக்கூடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். பின்னர், பள்ளியின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் மாணவர்களின் சாதனைகளை விளக்கும் ‘கல்வி மலர்’ நூலை வெளியிட்ட ஆட்சியர், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் நன்கொடையாளர்களைப் பாராட்டிப் பேசினார். இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விழாவிற்குப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும், மூத்த முன்னாள் மாணவருமான பொ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் மா.சுகுணா அனைவரையும் வரவேற்றார். விழாவில் உரையாற்றிய அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி யுவராஜ், “எங்கள் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் செலவில் இந்தப் பள்ளிக் கட்டிடங்களும், உணவுக்கூடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நவீன வசதிகளுடன் கல்வி கற்று, எதிர்காலத்தில் உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்தப் பள்ளிக்குத் தேவையான உதவிகளை வருங்காலத்திலும் தொடர்ந்து செய்யத் தயாராக உள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெ. ரவிச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இரா.ராஜேந்திரன், சி. ராஜம்மாள், பேரூர் துணைக் கண்காணிப்பாளர் கே.செல்லதுரை மற்றும் வடவள்ளி காவல் ஆய்வாளர் கே.பி.சாரதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் இறுதியில் ஆசிரியர் எஸ்.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார். மாலை வேளையில் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நூற்றாண்டு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
