திருநெல்வேலி கே.டி.சி. நகர் (KTC Nagar) அருகே இன்று அதிகாலை ஒரு தனியார் ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் சுற்றித் திரிந்த பசுமாடு மீது மோதி கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே பசுமாடு ஒன்று ஓடி வந்துள்ளது.
மாட்டின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனைத் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் பலமாக மோதியதில் அந்தப் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
திருநெல்வேலி – தூத்துக்குடி நெடுஞ்சாலை மற்றும் கே.டி.சி. நகர் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கால்நடைகள் சாலையின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கால்நடைகளைச் சாலைகளில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்துப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















