சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 63-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான மாட்டுவண்டி பந்தயம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், காளைகளின் வேகத்தையும் பறைசாற்றும் விதமாக அமைந்த இந்த பந்தயத்தைக் காணச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்களும் பொதுமக்களும் திரண்டனர்.
இந்த விறுவிறுப்பான மாட்டுவண்டி பந்தயத்தை ஐந்து நிலை நாட்டு மறவர் பேரவையின் தலைவர் பொன்.குணசேகரன் மற்றும் கௌரவத் தலைவர் இளம்பரிதி கண்ணன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பந்தயமானது பெரிய மாடு, நடுமாடு மற்றும் சிறிய மாடு என மூன்று தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சுமார் 44 ஜோடி மாடுகள் பங்கேற்று தங்களது ஆற்றலை வெளிப்படுத்தின.
பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றைச் சாதுர்யமாக இயக்கிய சாரதிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஆறு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், திறமையாக வண்டியை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கு அந்தந்த பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறையினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். பந்தயத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தென் தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இந்த மாட்டுவண்டி பந்தயம், குருபூஜை விழாவிற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருந்தது எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
