சென்னை: ரயில்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நூதன முறையில் திருட்டு செய்யும் நவோனியா கொள்ளைக் கும்பல் சென்னையில் அதிகம் உலாவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, எச்சரிக்கையாக இருக்கும்படி ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்களில், செல்போன்களை இலக்கு வைத்து திருடும் கும்பலின் சிசிடிவி காட்சிகளை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த காட்சிகளில் காணப்படும் நபர்கள், தொழில்முறை முறையில் திருட்டில் ஈடுபடும் நவோனியா கும்பலின் உறுப்பினர்கள் எனவும், கூட்டம் கூடிய இடங்களில் துண்டு, கைக்குட்டை அல்லது செய்தித்தாள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எளிதில் திருடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இந்தக் கும்பல், மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்படுவதால், அவர்களை கண்காணிப்பதும், பிடிப்பதும் சவாலாக இருந்து வந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் சமீபத்தில் அதிகரித்த திருட்டு சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் தொடர்புடைய மேலும் மூவர், அதில் ஒரு சிறுவனும் அடங்குவர், கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, இவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.