தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: தேனியில் விழிப்புணர்வு பேரணி – “Zero Accident” இலக்கை வலியுறுத்திய அரசு

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: தேனியில் விழிப்புணர்வு பேரணி – “Zero Accident” இலக்கை வலியுறுத்திய அரசு.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தேனி வட்டார போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று தேனி நகரில் பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதையும், “Zero Accident” இலக்கை நோக்கி பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியில், “பொதுமக்கள் தலைக்கவசம் அணிய வேண்டும்”, “வேகம் விவேகம் அல்ல” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனங்களின் முன்புறத்தில் பொருத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களிலும், 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார்களிலும் பேரணியாகச் சென்றனர்.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி மதுரை சாலை, பெரியகுளம் சாலை, அன்னஞ்சி விளக்கு வழியாக தேனி நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மேலும், ஆட்டோக்களில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை தலைக்கவசம் அணியாமை, அதிக வேகம், போக்குவரத்து சிக்னல்களை மீறுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் இயக்குதல் போன்ற விதிமீறல்களால் நிகழ்வதாக போக்குவரத்து துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி சிக்னல் அமைப்புகள், இ-சலான் முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்தி வருகிறது.

மேலும், அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகள் “பிளாக் ஸ்பாட்” என அடையாளம் காணப்பட்டு, அங்கு சாலை அகலம் அதிகரித்தல், வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும், போலீசார் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து தொடர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், விபத்து நேரங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்க 108 ஆம்புலன்ஸ் சேவை வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்த அவசர சேவை அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை விதிகளை கடைப்பிடிப்பதே உயிர் பாதுகாப்புக்கான அடிப்படை என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே “Zero Accident” இலக்கை அடைய முடியும் என்றும் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Exit mobile version