71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. திரைப்படங்களைத் தவிர்த்து பிற பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, தமிழ் குறும்படமான ‘லிட்டில் விங்ஸ்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் சரவணமருது சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர். இதில் முக்கியமாக, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சரவணமருது சவுந்தரபாண்டி, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவருக்கு மறைவுக்குப் பிறகு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளமை சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்திலும் சோகத்தையும் பெருமையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2023 அக்டோபர் 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சரவணமருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சக்திவேல் என்ற நபர், தன் மாமனாரும் மைத்துனரும் சேர்ந்து, “தகாத உறவு” என்ற காரணத்தால் அவரைக் கொலை செய்து, உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
லிட்டில் விங்ஸ் குறும்படம், கந்தர்வன் எழுதிய ‘சனிப்பிணம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. நவீன் என்பவர் இயக்கிய இந்தப் படத்தை ராஜூ முருகன் மற்றும் திலானி ரபிந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ள இப்படம், தற்போது தேசிய அளவிலான பெருமையையும் பெற்றுள்ளது.
மறைந்த பிறகும், தனது படைப்பாளித்தன்மையால் வாழ்ந்திருக்கும் சரவணமருதுவின் விருது, அவரது கனவுக்குத் தீர்வாக இருக்கிறது.