விவசாயத்தில் ‘டெக்னாலஜி’ புகுத்திய நத்தம் மாணவர்கள் கலெக்டர் சரவணன் பாராட்டு!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பள்ளி மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க திருவிழா’ மாவட்டத் தலைநகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளிகள் பங்கேற்றுத் தங்களின் நவீன அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தின. இதில் நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் தர்சன்குமார், குருநாத்வேலா மற்றும் மாணவி பத்மேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர், விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘தானியங்கி நீர்ப்பாசன முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள்’ (Automatic Irrigation System) குறித்த ஒரு நவீனப் படைப்பினை உருவாக்கி அசத்தினர்.

மண்ணின் ஈரப்பதத்தைக் கண்டறிந்து தேவைப்படும் போது மட்டும் தானாகவே பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் இந்தத் தொழில்நுட்பம், நீர் மேலாண்மையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் நடுவர்களால் பாராட்டப்பட்டது. மாணவர்களின் இந்தச் சிறப்பான புத்தாக்கப் படைப்பிற்கு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்கள் நேரில் அழைத்து, அவர்களுக்குச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசினையும் வழங்கி, வருங்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என ஊக்கமளித்துப் பாராட்டினார்.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளர் ராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் துணை முதல்வர் அனுசுயா தேவி ஆகியோர் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்து வழிகாட்டிய அறிவியல் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பெருமிதத்துடன் பாராட்டியது. விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத்தில் நத்தம் பள்ளி மாணவர்கள் படைத்த இந்தச் சாதனை மாவட்டக் கல்வி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version