இயற்கை எழில் சூழ்ந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வருகின்றனர் கே.அய்யாபட்டி ஸ்கை கார்மென்ட்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு அறக்கட்டளை தன்னார்வலர்கள். கரந்தமலை, சிறுமலை, அழகர்கோவில் மலை மற்றும் கடவூர் மலை என நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட நத்தம் பகுதியின் இயற்கை வளத்தை மேலும் மெருகூட்டும் வகையில் இக்குழுவினர் பல்வேறு பசுமைப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, காவல் நிலையங்கள், கோயில் வளாகங்கள், சாலை ஓரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிப்பதன் மூலம் இப்பகுதியை ஒரு பசுமைச் சோலையாக மாற்றி வருகின்றனர். மாணவர்களிடையே சுற்றுச்சூழல் ஆர்வத்தை விதைக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், இல்லச் சுப நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கும் புதிய பண்பாட்டை இவர்கள் உருவாக்கி உள்ளனர்.
இது குறித்து ஸ்கை கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ். பிரபா தெரிவிக்கையில், புவி வெப்பமயமாதலைத் தடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு தங்களது நிறுவனம் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். தொழிலாளர் தினம், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொழிலாளர்களின் குடும்ப விழாக்களிலும் நிழல் மற்றும் பலன் தரும் மரக்கன்றுகளைத் தங்களது நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வெற்றிகரமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிறுவன வளாகத்தில் சேரும் கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதுடன், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதேபோல், கலாம் அறக்கட்டளையின் தலைவர் கி. சசிகுமார் கூறுகையில், எதிர்காலத் தலைமுறைக்குத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்கவும், அழிந்து வரும் இயற்கைச் சமநிலையை மீட்டெடுக்கவும் நீர்நிலைப் பகுதிகளில் பனை விதைகள் மற்றும் பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நட்டு வருவதாகத் தெரிவித்தார். மலையடிவாரங்களில் குறுங்காடுகளை (Miyawaki type) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தேவைப்படுபவர்கள் அறக்கட்டளையைத் தாராளமாக அணுகலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் இந்த ஒருங்கிணைந்த முயற்சி, நத்தம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

















