திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ராமசாமி மணிமண்டபம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கிளியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததும், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்த மகேஷ்வரி என்பது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மகேஷ்வரிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த பெண் ஒருவர், திண்டிவனம் அருகே நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
















