“தி.மு.க. ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை; இதுவே நான்கு ஆண்டு சாதனை” என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, 17 வயது சிறுமி ஒருவர் மது போதையினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், வள்ளியூரில் தனியாக இருந்த 71 வயது மூதாட்டி நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன,” என தெரிவித்துள்ளார்.
“இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களின் நல்வாழ்வையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியாமல் போனது மட்டுமல்லாமல், வரலாறு காணாத அவப்பெயர்களையும் இந்த அரசு தேடித்தந்துள்ளது,” என்றார்.
அதோடு, “ஆளத் தெரியாதவர்கள் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. நாளுக்குநாள் பெண்கள் மீது குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. போலீசார் தி.மு.க.-வின் கூலிப்படையாகவே செயல்படுகின்றனர்” என்றும் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
“இந்த நிலையில் கூட, அடுத்த தேர்தலிலும் மக்கள் தங்களை ஆட்சிக்குவிப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஆனால், தி.மு.க. ஆட்சியில் மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த அலங்கோல ஆட்சியை எப்போது முடிவுக்கு கொண்டு வரலாம் எனவே மக்கள் எதிர்பார்க்கின்றனர்,” என அவர் கூறினார்.