நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மரணம் – இன்று மாலை தகனம்

சென்னை :
பாஜக மூத்த தலைவர் மற்றும் நாகாலாந்து ஆளுநரான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் வசித்து வந்த இல.கணேசன், கடந்த மாதம் நீரிழிவு காரணமாக கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு கழிவறையில் தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டார். வீட்டு ஓய்வில் இருந்தபோதும், வலி அதிகரித்ததால், ஆகஸ்ட் 8ஆம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் கோமா காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். எட்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, நேற்று மாலை 6.23 மணியளவில் உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

மறைந்த ஆளுநரின் உடல் தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பயணம்

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இல.கணேசன், இளமையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர ஈடுபாடு கொண்டார். திருமணம் செய்யாமல் அரசியல், பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபட்டார். 1970ஆம் ஆண்டு வருவாய் ஆய்வாளர் பணி கிடைத்தபோதும், அதைத் துறந்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகச் செயல்பட்டார்.

பாஜகவின் “ஒரே நாடு” பத்திரிகையின் ஆசிரியராகவும், “பொற்றாமரை” இலக்கிய அமைப்பை நடத்தியும் பணியாற்றினார். 1991ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த அவர், 2006–2009 வரை பாஜக மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர் பாஜக தேசியச் செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்தார்.

2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை. 2016ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் ஆளுநராகவும் பணியாற்றினார். 2023 பிப்ரவரி மாதம் முதல் நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சித்தாந்தங்களைப் பின்பற்றி வந்தாலும், திராவிடக் கட்சி தலைவர்களுடனும் நல்லுறவு பேணி வந்தவர் இல.கணேசன். தமிழ் இலக்கியம் மீதான ஆர்வத்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனும் நெருக்கம் கொண்டிருந்தார்.

மறைந்த இல.கணேசன் உடல் இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version