சென்னை : தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை காவல்துறை துணை ஆணையரிடம் பரபரப்பான புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தவெக அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொறுப்பாளராக செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா, அண்மையில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் எழுப்பிய புகாரில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த புகாரில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகே மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 10ம் தேதி ஒரு ஆட்டோவில் வந்த 5 பேர், அலுவலகத்தை நோக்கி ஆயுதங்களுடன் தாங்கள் யாரெனும் தெரிவிக்காமல் திடீரென பார்வையிட்டு சென்றுள்ளதாக புகார் கூறுகிறது.
அதே நாளில், பிற்பகல் மூன்றரை மணியளவில் அதே ஆட்டோவில் 7 பேர் வந்து கண்காணித்து சென்றதாகவும், 11 மணி மற்றும் 1.30 மணிக்கு இடையில் அதே வாகனம் இரண்டு முறை தோன்றியதாகவும், மேலும், திமுக கொடி பொறிக்கப்பட்ட இனோவா கார் ஒன்று அலுவலகத்துக்கு வெளியே சுற்றிவந்து கண்காணித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு, ஆதவ் அர்ஜுனாவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவங்களை தெளிவாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.