விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பீகார் மாநிலத்தில், தொடர்ச்சியாக ஏற்படுகிற படுகொலை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன் மிஸ்ரா என்பவர் மீது 12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பரோலில் வெளியே வந்திருந்த அவர், பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து, ஒவ்வொரு அறையையும் தேடியது. பின்னர் சந்தன் மிஸ்ரா இருந்த அறைக்குள் சென்று, அவரை சரமாரியாக சுட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதோடு, மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலை, சந்தனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த மற்ற ரவுடிக் கூட்டத்தின் பழிவாங்கல் செயல் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பீகார் டிஜிபி வினய் குமார் கூறியதாவது:
“2004 ஆம் ஆண்டில், தினமும் நான்கு படுகொலைகள் நடந்தன. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2,700 கொலைகள் பதிவாகியுள்ளன, இது கடந்த காலத்தை ஒப்பிடுகையில் குறைவாகும். போலீசார் பல்வேறு தடுப்புச் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்,” என்றார்.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், “பீகாரில் யாருக்கும் பாதுகாப்பில்லை. அரசு ஆதரவு கொண்ட குற்றவாளிகள், மருத்துவமனையின் ஐ.சி.யு.விற்குள் புகுந்து கொலை செய்கிறார்கள். இது 2005-ம் ஆண்டுக்கு முன் நடந்ததே இல்லை,” என்றார்.
சமீபத்திய கொலை வழக்குகள், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பீகாரை மீண்டும் தேசிய தலைப்புச் செய்திகளில் உயர்த்தியுள்ளது.