மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள் , உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் :-
மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பூங்கா முழுவதும் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே கரும்பு கட்டுகளுடன் பொங்கலுக்கு உரித்தான மண்பானையில் பொங்கல் வைத்தனர். மேலும் ஏராளமான ஊழியர்கள் பாரம்பரிய வேஷ்டி , சேலை அணிந்து கலந்து கொண்ட நிலையில் பூங்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டது. தொடர்ந்து பெரிய மண் பானையில் பெண் ஊழியர்கள் இணைந்து பொங்கல் வைத்து குத்து விளக்கேற்றி பொங்கல் பொங்கி வரும் பொழுது உற்சாக குரல் எழுப்பி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பின்னர் உறி அடித்தல் , மியூசிக்கல் சேர் , கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் செல்பி மற்றும் குழு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். இதில் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் , நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
