சென்னை : பா.ம.க.வில் தொடர்ந்து மூடு எடுக்கும் ராமதாஸ் – அன்புமணி இடையிலான உள்மோதல், இப்போது இளைஞரணியில் நிலவும் பதவி மாற்றம் மூலம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் முகுந்தன் பரசுராமன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முக்கியமாக, அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், அன்புமணியை பா.ம.க தலைவர் என குறிப்பிட்டது, ராமதாஸ் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இரட்டைத் தலைமை மோதல் – தொடக்க கட்டம்
2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முகுந்தனை இளைஞரணி தலைவராக மேடையிலேயே அறிவித்தபோது, அதற்கு அப்போது எதிர்வினை தெரிவித்தார் அன்புமணி. இதுவே இருவருக்கும் இடையே மோதல் போக்கை தீவிரப்படுத்தியது.
இருவருக்குள்ளான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கட்சியின் உள்நடப்பிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கூட்டணிக் கலந்தாய்வுகள், கட்சியின் நடவடிக்கைகள் ஆகியவற்றில் அன்புமணியின் பங்கு குறைவடைய, ராமதாஸ் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, பா.ம.க தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவர் என நியமித்தது கட்சி அளவில் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.
முகுந்தனின் விலகல் – கடிதத்தில் ‘டுவிஸ்ட்’
இந்நிலையில், முகுந்தன் பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டு, “சொந்த காரணங்களால் பதவியிலிருந்து விலகுகிறேன். ஆனால் மருத்துவர் அய்யா (ராமதாஸ்) என் குலதெய்வம். அன்புமணி தான் எங்கள் எதிர்காலம். அவர் தலைமையில் கட்சிப் பணியாற்றுவேன்” என தெரிவித்துள்ளார். இதில், அன்புமணியை பா.ம.க தலைவர் என குறிப்பிட்டிருப்பதும், அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுகிறது.
முகுந்தன் யார் ?
முகுந்தன், பா.ம.க நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி பரசுராமனின் மூன்றாவது மகன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. அவரது சகோதரர் பிரித்திவன், அன்புமணியின் மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி நிலைமை – வலுக்கும் குழப்பம்
இணைத் தலைமை முறையின் தாக்கம், குடும்ப அரசியலில் உருவாகும் பிளவுகள் மற்றும் உறவுக் கோட்பாடுகள் – இவை அனைத்தும் தற்போது பா.ம.க – வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகின்றன. முகுந்தனின் ராஜினாமா, அதிலும் குறிப்பாக அவர் காட்டிய நம்பிக்கை அன்புமணியின் மீது உள்ளது என்பதுடன், கட்சி உள்ளடக்க அரசியலில் மாறுபட்ட அணிகளை உருவாக்கும் என தெரிய வருகிறது.