ஆன்மிகமும் பாரம்பரியமும் கலந்த செட்டிநாட்டுப் பகுதியில் இருந்து, ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டுப் பழனி முருகப் பெருமானைச் தரிசிக்க நகரத்தார் சமூகத்தினர் காவடி ஏந்தி பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தைப்பூசத்திற்குச் சற்று முன்னதாகவே, வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் சமூகத்தினர் தங்களது பாரம்பரிய பழக்கத்தை மாறாமல் கடைப்பிடிக்கும் பொருட்டுப் பழனிக்குப் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள், பழனி தண்டாயுதபாணி சுவாமி மீது கொண்ட அதீத பக்தியால் பல தலைமுறைகளாகக் ‘காரைக்குடி நகரத்தார் காவடி’ என்ற பெயரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் முறைப்படி பூஜைகளுடன் தொடங்கியது. இதில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவாகப் புறப்பட்டு, மதியம் ந. வைரவன்பட்டியில் தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் மாலை வேளையில் திருப்புத்தூர் வந்தடைந்த இவர்களுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, லண்டன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உயர் பதவிகளிலும், தொழில்களிலும் இருப்பவர்கள் ஆவர்.
இது குறித்து யாத்திரையில் பங்கேற்றுள்ள காரைக்குடியைச் சேர்ந்த சிவனேசன் கூறுகையில், “தைப்பூசத் திருவிழா ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வரும். ஆனால், வெளிநாடுகளில் வசிக்கும் எங்களுக்குத் தற்போது தான் (டிசம்பர் இறுதி) விடுமுறை காலம் என்பதால், முருகனின் அருளைப் பெற முன்னதாகவே வந்து யாத்திரையைத் தொடங்கிவிட்டோம். கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த ஆன்மிகப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எத்தனையோ நாடுகளில் வசித்தாலும், எங்கள் மண்ணின் பாரம்பரியமான காவடி சுமந்து பாதயாத்திரை செல்லும் இந்த அனுபவம் மனதிற்குப் பெரும் அமைதியைத் தருகிறது. தினசரி பல மைல்கள் நடந்து வரும் நாங்கள், வரும் டிசம்பர் 28-ம் தேதி பழனியைச் சென்றடைந்து முருகப் பெருமானைச் தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
பாரம்பரிய உடைகளை அணிந்து, ‘அரோகரா’ முழக்கத்துடன் செட்டிநாட்டு வீதிகள் வழியாகச் செல்லும் இந்த நகரத்தாரின் பாதயாத்திரை, உலகெங்கிலும் பரவி வாழ்ந்தாலும் தங்கள் வேர்களையும், கலாசாரத்தையும் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 5 நாட்கள் பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, பக்தியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் ஒரு உன்னதப் பயணமாகத் திகழ்கிறது.
