திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரதான கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்,
23.10.24 ன்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்,
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும்,
உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை (OUTSOURCING) மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்திட வேண்டும்,
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரவி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


















