முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் நியாய விலைக்கடை அருகில் வசிக்கும் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு நகரும் வாகனத்தின் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுவருவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தமோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை மக்களின் வீடு தேடிச் சென்று செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் சீரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தாயுமானவர் திட்டத்தினை (12.08.2025) அன்று தொடங்கி வைத்தார்கள். பயனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை உள்ளீட்ட குடிமைப் பொருட்களை வழங்கும் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதுமுள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர்கள் பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 714 ரேசன் கடைகள் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று எண்ணிக்கையிலான நகரும் வாகனங்களை கொண்டு அரீசி, சாக்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனால் 34.197 எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடையவுள்ளனர்.

















