சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்து உரையாடியது, அமெரிக்க நிர்வாகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரிய அளவில் வெளிப்பட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவ்ரோ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவுக்கு ரஷ்யா தேவையில்லை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் நாடுகளுடன் தான் இந்தியா நெருங்கிய உறவை பேண வேண்டும். மாஸ்கோவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் பெறுவதை இந்தியா நிறுத்த வேண்டும்,” என்றார்.
மேலும், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தலைவராக இருக்கும் பிரதமர் மோடி, இரு சர்வாதிகாரிகளான புடின் மற்றும் ஜி ஜின்பிங் உடன் உறவை பேணியிருப்பது தவறு. அந்த சந்திப்பு வெட்கக்கேடானது. இறுதியில் இந்தியாவுக்கு நாங்கள் தான் தேவை, ரஷ்யா அல்ல என்பதை அவர் உணர்வார் என நம்புகிறோம்,” எனக் கூறினார்.
ஜி ஜின்பிங், புடினுடன் மோடியின் சந்திப்பு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்று என்றும் பீட்டர் நவ்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

















